அறிமுகமில்லாத நபரால் செய்யப்படும் உதவி -இது கற்பனை அல்ல!

*அழகான ஒரு ஞாயிற்றுக்கிழமை. நகரின் பிரதான உணவு விடுதி ஒன்றில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த உணவு பதார்த்தங்கள் சாப்பிட்டு நன்றாக ஏப்பம் விட்டு "பில் குடுப்பா " என்று கேட்கிறீர்கள். பில் பார்த்த உங்களுக்கு பேரதிர்ச்சி. பில்லில் நீங்கள் செலுத்தவேண்டிய மொத்த தொகை ஜீரோ என்று பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது :)

ஏன் எனது பில் ஜீரோ என்று வருகிறது என்று உணவக சிப்பந்தியிடம் கேட்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் இந்த மேசையில் அமர்ந்து சாப்பிட்டு சென்றவர் உங்கள் தொகையை தந்துவிட்டார். விரும்பினால் இன்னொருவருக்கு நீங்கள் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம். இதோ உங்கள் ஸ்மைல் கார்டு என்கிறார் சிப்பந்தி :)

*உங்களுக்கு முன்னாள் சுங்கச்சாவடியில் நிற்கும் கார்க்காரன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறான்(அதிகமில்லை..சில நிமிடங்கள் தான் ) அவனது தொகையை செலுத்தி ரசீது வாங்க!  அவனுக்கும் எங்கோ விரைந்தாக வேண்டும் என்பதுபோலவே உங்களுக்கும் எங்கோ பறந்தாக வேண்டும். கடுப்படித்து அவன் சென்ற பின்னர் நீங்கள் சென்று நிறுத்தி உங்களுக்கான toll தொகையை கவுண்டரில் இருப்பவரிடம் கொடுக்கிறீர்கள். கவுண்டரில் இருப்பவர் உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கிறார். உங்கள் காருக்கான தொகையை முன்னால் சென்ற காரோட்டி கொடுத்துவிட்டார். இந்த ஸ்மைல் கார்டு ஒன்றை உங்களிடம் தரச் சொன்னார் என்கிறார். 

அடடா..இவன் மீதா இத்தனை நேரம் சலித்துக் கொண்டோம் என்று நாக்கை கடித்துக் கொள்கிறீர்கள்.


அட போப்பா...Thanksgiving க்கு நாலு நாள் விடுமுறை ..நன்றாகத் தூங்கினால் இப்படியான கனவுகள் சகஜம் தான் என்கிறீர்களா?
வெயிட் எ மினிட் சகோஸ்!!! நான் சொல்வது உண்மை. நிஜம். நடந்தது! நடப்பது!

உனக்காக நான் அழ வேண்டுமென்றால் கூட நீ எனக்குப் பணம் தர வேண்டும் என்கிற முதலாளித்துவ சித்தாந்தத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் அமெரிக்காவில் தான் நடக்கின்றன இதெல்லாம்.

திருப்பி நீங்கள் எதையும் தராவிடினும் நாங்கள் எங்களால் எது முடியுமோ அதனை செய்வோம் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து செயல்படும் ஆயிரகணக்கான தன்னார்வ தொண்டர்கள் தான் இது போன்ற ஒரு புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

எதையும் எதிர்பார்ப்பதில்லை இவர்கள். தங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அடுத்தவர்களையும் இதுபோன்று செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறார்கள். கொடுத்தவர் யாரென்றே தெரியாது. ஆக நன்றிக்கடன் என்பதே இங்கே இல்லை. யாரென்று தெரிந்தால் தானே நன்றி சொல்ல. ஆக திருப்பிக் கொடு ( Pay back ) என்பதே இல்லை. வேறு வழி இல்லை. Pay it Forward தான் :) . நமக்கு யாராலோ நடந்தது போன்று நம்மால் வேறு யாருக்கோ இப்படி நடக்கவேண்டும் என்று நினைப்போம்!


இந்த தன்னார்வ குழுமத்தின் முக்கிய பிரமுகர் நிபுன் மேத்தா ( Nipun Mehta ). தங்களின் செயல்களின் நோக்கமும் விளைவும் குறித்து சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்.

at its core, it is a shift from

consumption to contribution

transaction to trust

scarcity to abundance

and isolation to community


இதன் மையக்கருத்து ஏதெனில்
நுகர்வில் இருந்து பகிர்வை நோக்கியும்
கொடுக்கல் வாங்கலில் இருந்து நம்பிக்கையை நோக்கியும்
பற்றாக்குறையில் இருந்து நிறைவை நோக்கியும்
தனிமையில் இருந்து குழுமத்தை நோக்கியும்
பயணிப்பது தான் என்கிறார்.

இந்த வருடத்தின் சிறந்த Commencement உரைகளில் ஒன்றை நிபுன் மேத்தா பென்சில்வேனியா பல்கலையில் நிகழ்த்தினார். "Paths Are Made By Walking" நடப்பதால் புதிய பாதைகள் உருவாகிறது என்ற தலைப்பில் நிபுன் தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அதிலிருந்து சில பகுதிகளை தமிழில் தருகிறேன்...

நான்கு வருடங்களுக்கு முன்பு எப்படி இந்த பல்கலைக்குள் நடந்து வந்தீர்களோ அதுபோலவே நடந்து எல்லையற்ற வாய்ப்புகளை வைத்திருக்கும் இந்த உலகுக்கும்  செல்லுங்கள். இந்த அதிவேக உலகில் நடப்பது என்பதே அரிதாகி விட்டது. பாதசாரி(Pedestrian ) என்பதே சாதாரண ஒரு விஷயத்தை சொல்வது போல் ஆகிவிட்டது. 

ஒரு நல்ல எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு நடப்பதற்கு ஆழமான வேர்கள் உண்டு. உலகின் பல மதங்களிலும் கலாச்சாரங்களிலும் இது காணப்படுகிறது .அப்படி நடப்பது ஒரு புனிதப் பயணமாக கருதப்படுகிறது.
2005 ம் ஆண்டு..திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகி இருந்த நிலையில் நானும் எனது மனைவியும் இது போன்று நடந்து ஒரு புனிதப்பயணம் செல்வது என்று முடிவு செய்தோம். ஒரு நாளுக்கு அதிகபட்ச செலவு 1 டாலர் தான் செய்வதென்று முடிவு செய்தோம். மற்ற எல்லா தேவைகளுக்கும் வழி நெடுக முகமறியாத அன்னியர்களைச் சார்ந்து இருப்போம். வழியில் யாராவது சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடுவோம் இல்லையெனில் பசித்துக்  கொண்டே நடப்போம். அதுபோலவே தங்குவதும். யாராவது தங்க இடம் தந்தால் தங்குவோம். இல்லையெனில் சாலையோரம் தூங்குவோம்.
இப்படியே 1000 கிலோமீட்டர்கள் நடந்தோம். மனிதர்களின் மிகச்சிறந்த குணங்களையும் மோசமான குணங்களையும் பாதையெங்கும் காண முடிந்தது,

இந்தப் பயணத்தில் பார்த்த சில விஷயங்களும் அது ஏற்படுத்திய வியப்புகளும் தனிச்சிறப்பானவை

1. கிராமவாசிகளின் வாழ்க்கை. எது கிடைத்தாலும் மீண்டும்  மீண்டும்  வேறொன்று வேண்டும் என்று கேட்கும் நகரவாசியைப் போலல்லாமல் கிடைப்பதை வைத்து திருப்தி அடைந்து கொள்கிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு மிக சுலபமாக இருக்கிறது. ஒரு கிராமத்து விவசாயி என்னிடம் சொன்னார். "மழையோ வெயிலோ அது இயற்கையின் பரிசு. கிடப்பதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று.". நம்மைச் சுற்றி இருப்பவை பரிசுப் பொருட்கள் என்ற எண்ணம் வந்துவிட்டதால் எல்லாவற்றையும் அணுகும் முறையே வேறுபட்டதாக இருக்கிறது. 
        தனது பிள்ளைகளை அழைத்துச் செல்வது போல மாட்டை அழைத்துச் செல்லும் விவசாயி. 
      எப்போதாவது தனது கிராமத்துக்கு வரும் பேருந்துக்காக மூன்று மணி நேரம் காத்திருக்கும் பெண்மணி. இவர்களின்  முகத்தில் எந்தக் கோபமும் ஆத்திரமும்  இல்லை.

2. கிராமங்களைக் கடந்து செல்லும்போது அவர்களின் உண்மையான அன்பைப் புரிந்துகொள்ள முடிந்தது.தங்களுக்கு உண்ண நல்ல உணவு இல்லையெனினும் எங்களுக்குத் தருவதற்காக மற்ற வீடுகளில் இருந்தெல்லாம் உணவுகள் வாங்கி வரப்பட்டன சில சமயங்களில். "விருந்தினர் கடவுள் மாதிரி" எனவே மறுக்காமல் சாப்பிடுங்கள் என்று சொல்லி உணவு பகிர்ந்தார்கள்.

3. கடுமையான தாகத்தில் நடந்து கொண்டிருந்தபோது அருந்த தண்ணீர் தந்த ஒரு பெண்மணியை எங்களால் மறக்க முடியாது. பின்னர் தெரிந்து கொண்டேன் ஒரு விஷயத்தை. ஒரு வாளி  குடி தண்ணீர்  எடுக்க அதிகாலை 4 மணிக்கு எழுந்து அந்தப் பெண்மணி 10 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டுமாம்.

இதுபோன்ற பல சுவாரசியங்களுடன் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிபுன் ஆற்றிய முழு உரையை படிக்க இங்கே சுட்டுங்கள்.

நிபுன் மற்றும் அவரது குழு செய்யும் செயல்கள் வித்தியாசமாய் இருக்கிறது. உதாரணம் dailygood என்ற பத்திரிகை. தினம் தினம் மனதுக்கு தெம்பூட்டும், புத்துணர்வு தரும் செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும் பத்திரிகை இது :)

Three Stages of  generosity என்ற தலைப்பில் TEDx நிகழ்ச்சியில் நிபுன் ஆற்றிய உரையில் இன்னும் பல சுவாரசியங்களை தொகுக்கிறார். அவரது உரையை கேட்க இங்கே சுட்டுங்கள்.

முதலாளித்துவத்தை கைவிடாது வாழும் மேற்கத்தியர்களுக்கு இந்த தகவல்கள் புதியதாக இருக்கலாம். இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகள் மூலமாக் அன்பையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதையும் பலமுறை படித்த நாம், அன்பளிப்பு மற்றும் தான தர்மங்களின் தாத்பர்யத்தை உணர்ந்த நாம்  அதனை எவ்வாறு எப்படி எப்போது செயல்படுத்தப் போகிறோம்?

NB :

1. ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் என்ற தலைப்பில் சகோ.ஆஷிக் எழுதிய இந்தப் பதிவையும் படியுங்கள்

2.   www.servicespace.org
     www.karmakitchen.org
     www.dailygood.org
     www.karmatube.org

என்ற நிபுனின் எல்லா திட்டங்களுமே வித்தியாசமானதாக இருக்கிறது. கொஞ்சம் மேய்ந்து பாருங்கள்.

----------------------------- 
முக்கிய அறிவிப்பு:இஸ்லாமியப் பெண்மணியில் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. முழு விபரம் அறிய    க்ளிக்குக 

பரிணாமத்தை கேள்விக்குள்ளாக்கும் வண்ணத்துப்பூச்சிகள் !!


மேலே நீங்கள் பார்க்கும் அழகுப் பூச்சி நான் தான் . கருப்பும் மெல்லிய ஆரஞ்சு நிறமும் கலந்து வெள்ளைப் புள்ளிகளும்  கொண்ட எனது இறக்கைகள் அழகோ அழகு.ஆபத்து இல்லாத அழகா? ஆபத்து இருக்கிறது...பின்னர் சொல்கிறேன். !!!

ஆங்கிலத்தில் எனது பெயர் monarch butterfly . தேமதுரத் தமிழில் எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள். அரசன் வண்ணத்துப்பூச்சி அல்லது
அரசி வண்ணத்துப்பூச்சி அல்லது ராஜ வண்ணத்துப்பூச்சி என எப்படி வேண்டுமானாலும் !!!

செப்டம்பர் மாதம்...கனடா நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் ஈரி ஏரியின் (Lake Erie )  கரையில் ஒரு மரத்தில் நெக்டார்(Nectar)  உண்டு
கொண்டிருக்கிறேன். கோடைக்காலம் முடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இலையுதிர் காலம் ஆரம்பிக்கும். சில்லென்று அடிக்கும் காற்றில் இருக்கும் குளிர் தன்மைகளை வைத்து இதை கணிக்கும் திறன் எனக்கு இருக்கிறது...ஐயோ !!! குளிர் என்னால் தாங்க முடியாது.. இலையுதிர் காலம் முடிந்து குளிர் காலம் வரும்..கனடா மற்றும் அமெரிக்காவில் குளிர் காலம் ஒரு கொடுமை. என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. நான் வேறு எங்காவது செல்ல வேண்டும் இந்தக்  குளிரில் இருந்து தப்பிக்க ..

நிறைய பூக்களிலிருந்து நெக்டார் குடித்து என்னை தயார் செய்து இதோ பறக்கத் தொடங்குகிறேன். ஏரியின் மறுபக்கம் அமெரிக்க நாடு...அங்கு  செல்லவேண்டுமெனில் இந்த ஏரியை கடந்தாக வேண்டும் ..கனடா நாட்டுக்கு மேலே செல்லச் செல்ல இன்னும் குளிரும்...இன்னும் மேலே போனால் ஆர்டிக் பகுதிகள்..அவ்வளவு தான் !! நான் செத்து விடுவேன்... இன்னாலில்லாஹ் !!

ஒரே வழி இந்தப் பக்கம் அமெரிக்கா செல்வது தான்... சுமார் 100 கிலோமீட்டரை விட அதிகமான நீளம் கொண்ட இந்த ஏரியை கடப்பது தான் எனது முதல் வேலை. என் வாழ்நாளில் நான் சில மீட்டர்களுக்கு மேல் பறந்ததில்லை..நீங்கள் உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் என் சின்ன கால்களுக்கும் உங்கள் உள்ளங்கைகளில் அடங்கி விடும் என் சின்ன இறகுகளுக்கும் இது ஒரு இமாலயப் பயணம். உயிர் பிழைக்க இது மட்டுமே வழி என்பதால் நிறைய தேனுண்டு என்னை தயார் செய்து கிளம்புகிறேன்..

பறந்து இந்த மாபெரும் ஈரி ஏரியை (Lake Erie ) கடந்து அமெரிக்காவில் நுழைகிறேன்..எனது பயணம் இங்கே முடியாது..குளிர்காலத்தில் இதுவும் என் மெல்லிய உடலுக்கு ஏற்றதல்ல...இன்னும் தூரம் செல்ல வேண்டும் ..பறக்கிறேன்..பறக்கிறேன்..பறந்து பறந்து 200 கிலோமீட்டர் ....இல்லை முன்னூறு , அடுத்து நானூறு ,ஐநூறு ,அறுநூறு, ஆயிரம் ..ஆயிரத்து ஐநூறு.....மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள் 3000 கிலோமீட்டர்கள் பறந்து மெக்ஸிகோ நாட்டின் ஒரு சின்ன காட்டில் வந்து சேர்ந்துவிட்டேன்...நான் மட்டுமல்ல என்னைப் போல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மற்ற monarch வண்ணத்துப்பூச்சிகளும் தான்..

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் !!

1. முதலில் உங்களிடம் சொன்னது போல வாழ்நாளில் சில நூறு மீட்டர்களுக்கு மேல் பறந்திராத நான் எப்படி 3000 கிலோமீட்டர்கள் பறந்து வந்தேன்?

2. அது கூடப் போகட்டும். கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாண்டி மெக்ஸிகோ நாட்டுக்கு அதுவும் இந்த சின்னக் காட்டுக்கு நான் எப்படி வந்தேன்?

3. என்னை விட்டுவிடுங்கள்...வட அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து என்னைப்போல கோடிக்கணக்கான பூச்சிகள் எப்படி சொல்லி வைத்தது மாதிரி சரியான நேரத்தில் இங்கு வந்து சேர்ந்தன?

4. பக்கத்து ஊருக்குப் போவதற்கே பல்வேறு போர்டுகளைப் பார்த்துப் போகும் நீங்கள், என்னால் வழி தவறாமல் 2000 மைல்கள் பறக்க முடிந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

இதெல்லாம் உங்களுக்கு புரியாது...ஏன் ?எனக்கே தெரியாது :)
..படைத்தவனுக்கே வெளிச்சம் :)

இங்கே மெக்ஸிகோவிலும்  குளிர் காலம் தான் ...ஆனால் கனடா மற்றும் அமெரிக்கா போன்ற கடுங்குளிர் இல்லை...சமாளிக்கலாம்.. கூட்டம் கூட்டமாக ஒன்றோடொன்று உடம்பை ஓட்ட வைத்துக் கொண்டு இதோ இந்த சின்ன காட்டின் மரங்களில் தொங்கிக்கொண்டே ஒரு சிறு தூக்கம் (Hibernation) போடவிருக்கிறோம் ஜமாத்தாக...ரொம்ப எல்லாம் இல்லை..ஜஸ்ட் நாலு மாதம் மட்டுமே...கொர்ர்ர்ரர்ர்ர்ரர் !!!!!!

கொத்துக் கொத்தாய் monarch வண்ணத்துப்பூச்சிகள் தூங்கும் காட்சி 




தூக்கத்தில் சில தகவல் சொல்றேன் கேட்டுக்கோங்க !!

கூட்டம் கூட்டமாக நாங்கள் அசந்து மாதக்கணக்கில் தூங்குவதை வாய்ப்பாக பயன்படுத்தி எங்களை துவம்சம் செய்ய வரும் எதிரிகள் பலர் உண்டு...அதிலும் இந்த பல்லிகள்  இருக்கே ரொம்ப மோசம்..கடிச்சு சாப்பிடும் எங்கள...இங்க தான் ஒரு ட்விஸ்ட்...அழகு கொஞ்சும் இந்த உடல் முழுவதும் விஷம் :)
..அதனால் பல்லி  தவளை போன்றவை எங்களை சாப்பிட முடியாது :) ..ஆனாலும் நீளமான அலகு வைத்திருக்கும் சில பறவைகள் சர்வ சாதரணமாக எங்கள் இறகுகளை பிய்த்துப் போட்டுவிட்டு விஷம் அதிகமான பகுதிகளையும் பிய்த்து விட்டு  சாப்பிடும் :(

ஆஹா  !! கொஞ்சம் விழிப்பு வருகிறது..குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தின் இளஞ்சூடு எங்கள் தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கிறது. மரத்தில் ஒட்டியிருந்த மாபெரும் கூட்டம் சிதறுகிறது..நான்கு மாதங்கள் கழித்து முதல் முறையாக பக்கத்தில் இருக்கும் சிற்றோடையில் நீர் பருகுகிறேன். ஆஹா என்ன சுவை !!!

குளிரில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட நீநீநீநீநீநீநீநீநீண்ட பயணம் மற்றும் தூக்கம் எல்லாம் வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டுவிட்டது...ஒரு நாள் என்னால் 80 மைல்கள் மட்டுமே அதிகபட்சம் பறக்க முடியும்..அதற்குள் தேன் கிடைக்கும் ஒரு இடத்தை அடைந்துவிடுவோம்..சாப்பிட்டு மீண்டும் பயணம்..இப்படி கனாடவில் இருந்து மெக்ஸிகோ வர மட்டுமே ஒரு மாத காலம் போய்விட்டது. ஆமாம் எங்கள் ஒட்டு மொத்த வாழ்நாளே ஒரு வருடம் கூட தேறாது...மாதங்களைத் தொலைத்து விட்டோம்...நீருண்ட பின்னர் முக்கிய விஷயம் இருக்கிறது..வேறென்ன இனப்பெருக்கம் தான்...நீருண்ட ஆண் பூச்சிகள் மரத்தில் இன்னும் தூங்கும் பெண் பூச்சிகளை பிய்த்து எழுப்புகிறது...குறை சொல்ல ஒன்றுமில்லை...நேரம் இல்லை எங்களுக்கு அதனால்தான் இந்த முயற்சி...

அடுத்து என்ன !! இனப்பெருக்கம் முடிந்தால் மகப்பேறு தான்..miscarriage ,abortion ,கருக்கலைப்பு, cord around neck,  Fallopian tube pregnancy எல்லாம் உங்களுக்குத் தான்..எங்களுக்கு இல்லை ...எங்களுக்கு எப்போதுமே சுகப் பிரசவம் :)




கண்மூடுகிறேன் தோழர்களே...அவ்வளவு தான் என் வாழ்க்கை...நீங்கள் மட்டும் என்னவாம்? என்னைவிட சில வருடங்கள் அதிகம்..தட்ஸ் ஆல்..

நிறைவாக வாழ்ந்து என் சந்ததியை உங்கள் பார்வையில் விட்டுப் போகிறேன்..என் கதை உணர்ச்சி மிக்கதாய் இருந்தது என்று நீங்கள் சொல்வது காதில் சன்னமாய் கேட்கிறது..இல்லை தோழர்களே..எனது மகனின்/மகளின் கதையை  கேளுங்கள் அதைவிட எனது அழகுப் பேத்தி/பேரனின் கதையை கண்டிப்பாகக் கேளுங்கள்...உணர்ச்சி மிக்க மற்றொரு அத்தியாயம் அது..கடைசியில் எனது கொள்ளுப்பேரன் சில கேள்விகளுடன் உங்கள் முன் வருவான்...கண்டிப்பாக உங்களால் விடை சொல்ல முடியாத கேள்விகள்....Don't  மிஸ் இட் !!!

முதல்  தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள்

என் தாயின் கடைசிக் காலத்தில் சில தகவல்களை  உங்களுக்குச் சொல்லமுடியவில்லை...வசந்த காலத்தின் தொடக்கத்தில் இனப்பெருக்கம்  முடிந்து முட்டைகளை அவள் இட்டு வைத்தது எருக்கஞ்செடியில் (Milkweeds ). அதில் முட்டை பொரித்து வெளிவரும் நாங்கள் அந்த நச்சுப்பால் நிறைந்த எருக்கஞ்செடியின் இலைகளை கபளீகரம் செய்வதால் தான் எங்கள் உடலுக்கும் வந்தது அந்த நச்சுத் தன்மை. எதிரிகளிடமிருந்து எங்களைப் பாதுகாக்கும்  இந்த விஷயம் இங்கே எங்கள் பிறப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது. 

முட்டையிலிருந்து வெளிவந்து புழுவாகி பின்னர் பூச்சியாகி நாங்கள் முழு வண்ணத்துப்பூச்சியாவோம். மெக்ஸிகோ எங்கள் வீடல்ல வெறும் விடுதி மட்டுமே. என் தாய் தேசத்துக்கு நான் திரும்ப வேண்டும். நான் கனவில் கூட பார்த்திராத 3000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கனடா நோக்கிய எனது பயணம் ஆரம்பம். வழியே தெரியாத, கேள்விப்பட்டிராத ஒரு தேசத்துக்கு இவ்வளவு தொலைவு தாண்டி எப்படிப் போவேன் என்கிறீர்களா? எனக்கும் தெரியவில்லை...எல்லாம் படைத்தவன் தந்த இயற்கை உள்ளுணர்வு தான் (Natural Instinct ).

என் தாய் இந்தப் பயணத்தை நிகழ்த்தியதும் அப்படித்தான். சூரியன் தான் எங்கள் திசைகாட்டி (compass). பூமியின் காந்தப்புலத்தையும் சூரியனின் வெளிச்சத்தையும்  வைத்து  நாங்கள் திசை அறிந்து பயணிப்பதாய்   உங்கள் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..எங்களிடம் கேட்கவா செய்தார்கள் :) ?

சுமார் 1000 கிலோமீட்டர்கள் பறந்துவிட்டேன் தோழர்களே. உடல் இசைய மறுக்கிறது...என் அம்மாவைப் போல் நான் அதீத பலசாலி அல்ல.சவலைப்பிள்ளை. நான் மட்டும் சவலையாக இருந்தால் பரவா இல்லை..என் அம்மாவின் தலைமுறையில் இருந்து பிறந்து வந்த லட்சக்கணக்கான என் தலைமுறை பூச்சிகள் அனைவருமே சவலைப்பிள்ளை தான். பயணம் முடிவுக்கு வரும் இன்னும் சில நாட்களில்..என் வரலாறு இத்தோடு முடிந்து விடுமா? இல்லை கூடாது...தன்னந்தனியே கனடா டு மெக்ஸிகோ போன பரம்பரையின் மானம் என்ன ஆவது?

பேசி புண்ணியமில்லை...நாங்கள் கூட்டம் கூட்டமாய் தரை இறங்குகிறோம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே எருக்கங்காட்டுக்குள்...இனப்பெருக்கம் செய்து எருக்க  இலைகளில் முட்டையிட்டு இதோ கண்மூடுகிறேன்.. என் மகனிடம் நேரமிருந்தால் பேசுங்கள்..

இரண்டாம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் :

முட்டை to  புழு to பூச்சி எல்லாம் முடிந்து நானும் பறக்கிறேன்.எங்கே ? என்று கேட்கிறீர்களா? வேறெங்கே.என் தாய் தேசம் நோக்கித் தான். எப்படித்தெரியும் எனக்கு அது எங்கே இருக்கிறது எவ்வளவு  தூரம் பறப்பது என்றெல்லாம்? நீங்கள்  தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் அதிசயங்களின் தொடர்ச்சி தான் இது..எங்கு செல்ல வேண்டும் என்ற வரைபடம் (Map ) எனக்குள் இருப்பதாய் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

நானும் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து விட்டேன்...முந்தய தலைமுறை போல் என்னாலும் இலக்கை எட்ட முடியவில்லை...தரை இறங்கி எருக்கன்காட்டுக்குள் முட்டையிட்டு சந்ததியை உறுதிசெய்து மாண்டு போகிறேன்..அடுத்த தலைமுறை உங்களிடம் வரும்..பரிவாய்ப் பேசுங்கள்  அவர்களிடம்.

மூன்றாம்  தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் :

தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு வீரனிடம் இருந்து மற்ற வீரனுக்கு கடத்தப்படும் குறுந்தடி (Baton  ) போல பொறுப்பு இப்போது எங்களிடம்...பரம்பரை பரம்பரையாக எங்கள் தாய் தேசத்தின் வரைபடமும் அங்கு செல்வதற்கான வழியும் எங்கள் மூளையில் பதிந்திருப்பதாய் (Imprint ) சொல்கிறீர்கள். என்னமோ ஒன்று..ஆனால் நாங்களும் பறக்கிறோம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள்.

வெற்றி!!! வெற்றி !!! வந்துவிட்டோம் எங்கள் முன்னோர்களின் தேசத்தில்.
வசந்த காலத்தில் மெக்ஸிகோவில் எங்கள் முன்னோர்களால் தொடங்கப்பட்ட பயணம் கோடைக்காலத்தில் முடிவுக்கு வருகிறது.
இன்னும் சில மாதங்களில் கோடைக்காலம் முடிந்து விடும்..நாங்களும் பலசாலி தலைமுறை அல்லர். சந்ததியை உருவாக்கி கண்மூடுகிறோம்..அடுத்த தலைமுறை கண்டிப்பாக உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.


நான்காம்   தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் அல்லது சூப்பர் தலைமுறை (Super Generation ) :

செப்டம்பர் மாதம்..கனடாவில் ஒரு ஏரிக்கரையில் நெக்டார் உண்டு
 அமர்ந்திருக்கிறேன்..

எங்கோ கேட்ட குரலாகத் தெரிகிறதா? ஆமாம் என் கொள்ளுப்பாட்டி உங்களிடம் சொல்லிச்சென்ற கொள்ளுப் பேரன் நான்தான்...என் அம்மா மற்றும் பாட்டி  போல சவலைப் பிள்ளை இல்லை நான்..என் பெயர் பார்த்தே யூகித்திருப்பீர்கள் ..

சூப்பர் தலைமுறை. Super Generation !!

இதோ வந்து விட்டது இலையுதிர் காலம். கொள்ளுப் பாட்டியைப் போல் நானும் பறப்பேன் மெக்ஸிகோவுக்கு. எனக்கு முந்திய தலைமுறை போல் வழியில் செத்துப் போக மாட்டேன்.. கனடா to மெக்ஸிகோ நேரடிப் பயணம் ..3000 கிலோமீட்டர்கள்..
அதெப்படி உனக்கு மட்டும் மெக்ஸிகோ  வரை செல்லும் பலம் கிடைத்தது என்று கேட்கிறீர்களா? தொடரும் ஆச்சர்யங்களில் அதுவும் ஒன்று தான். இனி கொள்ளுப் பாட்டி உங்களிடம் கேட்கச் சொன்ன கேள்விகளைக் கேட்கிறேன்..உங்களுக்கு பதில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பரிணாமம் பற்றிப் பேசும் உங்கள் தோழர்களிடம் மறக்காமல் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்..

1. முன்பு பார்த்திராத ஒரு தேசத்துக்கு எப்படி நாங்கள் செல்கிறோம்? ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எப்படி இந்த தகவல்களை பரிமாறியது? 

2. மெக்ஸிகோவில் இருந்து கனடா வந்து சேர மூன்று தலைமுறை பிடித்தது..ஆனால் கனாடவில் இருந்து மெக்ஸிகோவுக்கு  எப்படி ஒரே தலைமுறையைச் சார்ந்த நான் (Super Generation) பயணிக்கிறேன் ?


3. இயற்கைத் தேர்வு (Natural Selection ) என்னும் பரிணாம விதிப்படி அடுத்தடுத்த தலைமுறை தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமே. ஆனால் சூப்பர் தலைமுறைக்கு பின்னர் வந்த மூன்று தலைமுறையும்
ஏன் சவலைப்  பிள்ளையாய் போனது?

4. ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் இந்த நிகழ்வில் ஏன் இப்படி மூன்று
தலைமுறைகளுக்கு அடுத்து வரும் ஒரு தலைமுறை சர்வ பலசாலியாய் இருக்கிறது?

5. மெக்ஸிகோ நான் வாழத் தகுதியான இடமெனினும் என் தலைமுறைகள் ஏன் கனடா நோக்கி வருகிறது? இயற்கைத் தேர்வு (Natural Selection ) என்னும் பரிணாம விதிப்படி எனக்கு உகந்த பகுதியாக மெக்ஸிகோ இருக்கும்போது நான் ஏன் கஷ்டத்தை விலை கொடுத்து வாங்குகிறேன்?


6. மில்லியன் கணக்கான ஆண்டுகள் எங்கள் மூதாதையர் இப்படி பறந்து கொண்டிருந்தாலும் எங்கள் இறக்கைகள் இன்னும் ஏன் சிறியதாகவே இருக்கிறது?


7. பரிணாம விதிப்படி நான் ஏன் குளிர் காலத்திலும் வாழுமாறு என்னை தகவமைத்துக் கொள்ளவில்லை? காலம் காலமாக நான் ஏன் இவ்வளவு தூரம் பயணித்து குளிரில் இருந்து தப்ப நினைக்கிறேன்? 


8. கனடா அமெரிக்கா மெக்ஸிகோ என்று மட்டுமே நான் ஏன் சுற்றுகிறேன்? வருடம் முழுவதும் எனக்கேற்ற காலநிலை உள்ள ஒரு இடத்துக்கு செல்ல நான் ஏன் இன்னும் முயலவில்லை?




மேலதிக தகவல்கள்:

1.BBC தொலைக்காட்சியின் புகழ்பெற்ற LIFE தொடரில் இருந்து இந்த monarch வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்தல் பற்றிய அழகிய காணொளி பார்க்க

2. இந்த வண்ணத்துப் பூச்சிகள் குறித்து ஸ்மித்சோனியன் institute பக்கத்தில் சில தகவல்கள் பார்க்க

3. இவை குறித்த விக்கி பக்கம் பார்க்க



நன்றிகள் :
பரிணாமம் குறித்தான எனது சந்தேகங்களுக்குப் பதிலளித்த நண்பர் ஆஷிக் க்கு நன்றிகள் பல.




சல்மான் கான் : கான் அகாடமி : சத்தமின்றி ஒரு மாபெரும் புரட்சி !!!

அஸ்ஸலாமு அலைக்கும்,


சல்மான் கான்..நமக்குத் தெரிந்த இந்திய நடிகர் அல்ல... இவர் அமெரிக்கர்...இவரது பெற்றோர்கள் வங்காளத்திலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர்கள்...உலகின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்றான MIT Massachusetts Institute of Technology  இல்  மூன்று பட்டப்படிப்பும் பின்னர் இன்னொரு பிரபல பல்கலைக்கழகமான ஹார்வர்ட் இல் பொருளாதார மேலாண்மையில் மேற்படிப்பும்   படித்தவர்...MBA படித்தவர்களுக்கு அமெரிக்காவில் dream job லட்சங்கள் சம்பளமாகக் கிடைக்கும் HEDGE fund analyst வேலை...அந்த  வேலையில்  சேர்ந்தார் சல்மான் கான்..

தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் இவருக்கு ஒரு பொழுதுபோக்கு இருந்தது...அது அமெரிக்காவின் பிறிதொரு பகுதியில் பள்ளியில் படிக்கும் தனது cousin குட்டிப் பெண் நாதியா வுக்கு இன்டர்நெட் வழி கணிதம் சொல்லித்தரும் வேலை தான் அது... பின்னாளில் வேறு சில cousin  களும் சேர்ந்து கொள்ள நல்ல பொழுதுபோக்காக இருந்தது சல்மான்னுக்கு...

சில நாட்கள் வேலைப் பளு அதிகமான போது அவரால்  சரியான நேரத்தில் இன்டர்நெட்டில் பாடம் நடத்த முடியவில்லை...பிரச்னையைத் தீர்க்க அவர் ஒரு வழி கண்டுபிடித்தார்...சிம்பிள்...பாடத்தை ரெகார்ட் செய்து youtube தளத்தில் வெளியிட்டு அதன் சுட்டியை அந்தப் பிள்ளைகளுக்கு கொடுத்தார்...

ஒரு பெரிய ஆச்சரியம் அவருக்கு காத்திருந்தது. சல்மான் நேரடியாகப் பாடம் நடத்துவதை விட youtube வழி பாடம் நடத்துவது குழந்தைகளுக்குப்  பிடித்திருந்தது... ஏனென்று ஆராய்ந்து பார்த்தால் அந்தக் குழந்தைகளுக்கு அது தான் வசதியாய் இருந்தது..பாடம் நடத்துபவரை தங்கள் இஷ்டப்படி அவர்களால் நிறுத்த முடிந்தது...ஆடிக்கொண்டிருக்கும் வீடியோ கேம் முடிந்த பின்னர் தான் கணிதப் பாடம் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அவர்களால் படிக்க முடிந்தது...ஒரு நாள் பாடத்தை மறுநாளும் படிக்கலாம்...சந்தேகம் வந்தால் திருப்பித் திருப்பி கேக்கலாம்..இப்படி எத்தனையோ நன்மைகள்...

ஒரு வகையில் சல்மானுக்கும் கொஞ்சம் நிம்மதி தான்...அவருக்குப் பிடித்த வேகத்தில் நினைத்த நேரத்தில் அவருக்கு நேரம் கிடைக்கும்போது பாடத்தை நடத்தி youtube தளத்தில் போட்டு சுட்டியை கொடுத்தால் போதும் :) :) வேலை முடிந்தது :)

பாடம் நடத்துவது கூட ரொம்ப சாதாரணமான டெக்னிக் தான்...ஒரு கரும்பலகையில் வெவ்வேறு நிறத்தில் சாக்பீஸ் வைத்து வரைந்தால் எப்படி இருக்கும்..அது தான் பாடத்துக்கான் வீடியோ :)

பொதுவான விஷயம் தானே அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று காணொளிகளை பிரைவேட் ஆக்காமல் எல்லாரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக் ஆகவே youtube இல்  ஷேர் செய்திருந்தார்... நாட்கள் செல்லச் செல்ல அவரது உறவினர்களின் குழந்தைகளைத் தவிர வேறு பலரும் அதனை பயன்படுத்த  ஆரம்பித்தனர்...   அந்த வீடியோக்களின் கீழே அதனை பயன்படுத்துபவர்கள் கொடுத்திருந்த கமெண்ட்ஸ் அவரை மென்மேலும் உற்சாகமூட்டியது...

சாம்பிளுக்கு சில  :

ஒரு தாயார் இப்படி எழுதியிருக்கிறார்.
"autism நோய் இருக்கும் எனது பன்னிரண்டு வயது மகனுக்கு கணிதப் பாடங்கள் கொஞ்சம் கூடப் புரிவதே இல்லை..உங்கள் வீடியோ மூலம் அவனை கவனிக்கச் செய்து அவனால் இப்போது கணிதப் பாடங்களை சிறப்பாக கற்க முடிகிறது...உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..."

இன்னொரு மாணவர்:
 "முதல் முறை ஒரு கணித வகுப்பை புன்னகையுடன் என்னால் கவனிக்க முடிந்தது...."

உலகம் முழுவதும் தொழில்நுட்பம் முழுமையாகச் சென்றடையாத நாடுகளில் CISCO நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி அங்குள்ள அநாதை நிலையங்களில்  இணைய தொடர்பு வசதிகளை செய்து கொடுத்தது. அப்படி இணையத் தொடர்பு கொடுக்கப்பட்ட மங்கோலியா நாட்டில் உள்ள ஒரு அநாதை நிலையத்தில் இருந்த zaaya என்ற பதினாறு வயது சிறுமி KHAN ACADEMY பாடங்களைக் கற்றுத் தேறினார். இன்று கான் அகாடமி உலகின் மற்ற மொழிகளில் அதன் பாடங்களை எடுத்துச் செல்லும் முயற்சியில் Zaaya வும் ஒருவர். அவர் தான் மங்கோலியா மொழியில் பாடங்களை மொழிபெயர்க்கும் chief translator :) .மாஷா அல்லாஹ்     

வாவ்...சல்மானால்  நம்பவே முடியவில்லை...பாடங்கள நிறைய நடத்தி வீடியோ வாக மாற்றி youtube  தளத்தில் போட்டுக் கொண்டே வந்தார்..உலகம் முழுவதும் அவரது வீடியோ வுக்கு பெருத்த ஆதரவு திரண்டது... லட்சங்களை அள்ளித்  தந்த  கனவு வேலையே ராஜினாமா செய்தார்..முழு நேரமும் இதனைச் செய்ய ஆரம்பித்தார்... Khan academy பிறந்தது !!!  

ஒரு நிறுவனம் போன்று இதனை மாற்றி இன்னும் கொஞ்ச பேரை வேலைக்கு சேர்த்தார். அவர்களை வைத்து இதனை மேம்படுத்தும் சில மென்பொருட்கள் சிலவற்றை செய்தார்... சில அரசு சாரா நிறுவனங்கள்  நிதியுதவி அளித்தன...உலகின் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் கூட கொஞ்சம் நிதி அளித்தார்...மக்களுக்கு பயன்படும் சிறந்த ப்ராஜெக்ட் களுக்கான போட்டியை google நிறுவனம் நடத்தியபோது கான் அகாடமி போட்டியில் ஜெயித்தது...இந்த நிதி உதவிகளை  வைத்து தனக்கும் தன்னுடன் இருந்த குழுவுக்கும் சம்பளம் எடுத்துகொண்டார்.   

இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் KHAN academy யை பயன்படுத்துகிறார்கள்...

  http://www.youtube.com/user/khanacademy  என்ற அவரது youtube சேனல் மூவாயிரத்துக்கும் அதிகமான வீடியோக்களை   கொண்டுள்ளது... தளத்துக்கான மொத்த ஹிட்ஸ் இருபது கோடியை நெருங்குகிறது (நான் இந்தப் பதிவை இரண்டு வாரங்களுக்கு முன்னாள் எழுத ஆரம்பிக்கும்போது பதினெட்டு கோடி :))...இது தவிர இந்த வீடியோக்களை இங்கிருந்து copy செய்து பலரும் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்...அனைத்துப் பாடங்களும் இலவசம் என்பதால்...

சமீபத்தில் அமெரிக்காவின் சில பள்ளிக் கூடங்கள் khan acdemy யின் பாடங்களை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கத் துவங்க இது இன்னொரு பரிணாமம் எடுத்தது...   http://www.khanacademy.org/ என்ற அவரது தளத்தில் நீங்கள் register செய்து நீங்களே ஆசிரியராக இருந்து மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்...அவர்களின் கல்வி முன்னேற்றத்தை நீங்கள் கண்காணிக்கலாம்... graph போட்டு அவர்களின் தரத்தை khan academy யின் மென்பொருள் உங்களுக்குச் சொல்லும்...எந்த மாணவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை காலையில் வகுப்புக்குப்  போகும் முன் தெரிந்து கொள்ளும் ஆசிரியர் பாடத்தைக் கற்ற மாணவனையும் புரியாமல் இருக்கும் மாணவனையும் சேர்த்து உக்கார வைத்து அவர்களுக்கிடையே சொல்லிக் கொடுக்க வைக்கிறார்... 

அப்படியெனில் ஆசிரியருக்கு என்ன வேலை? பாடம் khan academy யில் இருக்கும்போது...   

பள்ளியில் விருப்பமில்லாமல் பாடம் கற்பது இப்போது இல்லை..வீட்டிலேயே ஜாலியாக பாடம் கற்கலாம்...நிறுத்தி நிறுத்தி தமக்குப் பிடித்த வேகத்தில் , திரும்பத் திரும்ப கேட்டு பாடத்தை கற்கும் மாணவர்கள் முன்பு வீட்டில் மூக்கு சீந்திக் கொண்டே செய்யும் பாழாய்ப் போன homework ஐ இப்போது பள்ளியில் செய்கிறார்கள்... தலைகீழ் மாற்றம் என்பது இது தானா?

பள்ளிக்  குழந்தைகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...நீங்கள் என்ன செய்யலாம்:

1 . உங்களுக்கு சந்தேகமான பாடங்களின் காணொளிகளை திரும்பத் திரும்ப பார்த்து கற்றுக் கொள்ளலாம்...நிறைய பாடங்கள் பத்து நிமிட நேரம் தான் ஓடும் ..ஒரு நாள் ஒரு வீடியோ வைத்து பார்த்தால் கூட உங்களால் நிறைய கற்றுக் கொள்ளமுடியும்...

2 . உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு (பள்ளி முதல் கல்லூரி வரை ) இதனை அறிமுகப் படுத்தலாம்... பாடங்களை நீங்கள் கற்று அவர்களுக்குச் சொல்லித் தரலாம்...

3 .நேரம் இருப்பவர்கள் இதில் ஆசிரியராக சேர்ந்து மற்ற குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம்...

4 . பல்வேறு மொழிகளில் khanacademy பாடங்கள் மொழிபெயர்க்கப்டுகிறது...ஆங்கில வீடியோவில்  subtitle சேர்த்து வெளியிடப்படுகிறது...தமிழில் முடிந்தால் வெளியிடலாம்...

5 .இதனை  பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு குழுவாக  உலகின் எல்லா நாடுகளிலும் செயல்படுகிறார்கள்...உங்கள் பகுதியில் எப்போது மீட்டிங் என்று பார்த்து அதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்...சென்னை யில் நடக்கும் சந்திப்புகள் பற்றி இங்கே பாருங்கள் http://www.meetup.com/khanacademy/Chennai-IN/


இது ஒரு  புதிய உலகம்..New world Order .. யாரும் எதனை வேண்டுமானாலும் கற்கலாம்... மிக எளிதாக..அதுவும் வீட்டில் இருந்தே... "The world is Flat " என்று thomas friedman எழுதிய புத்தகத் தலைப்பு தான் நினைவு வருகிறது...உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க நீங்களும் கற்று அவர்களுக்கும் உதவுங்கள்...இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் !!!  
     


இன்னும் சில தகவல்கள் :

1 . பாடங்களின் காணொளிகள் பகிரப்படும் இவரது youtube சேனல்

2 .இவரது நிறுவனத்தின் வலைத்தள முகவரி
http://www.khanacademy.org/

3 . பதினெட்டு லட்சம் பேரால் இதுவரை பார்க்கப்பட்டுள்ள சல்மான் கான் TED நிகழ்ச்சியில் கர கோஷங்களுக்கிடையே நிகழ்த்திய உரை. பேச்சு முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி standing ovation கொடுப்பதை நீங்கள் கடைசியில் பார்க்கலாம்.


4 . (சென்னையில் நடக்கும் Khanacademy சந்திப்புகள்  )


5. " வெகு அரிதாக உலகின் மாபெரும் புரட்சிகளை ஏற்ப்படுத்திய மனிதர்களை நீங்கள் நேரில் கண்டிருப்பீர்கள்.அப்படி உங்களால் நேரில் கண்டு பேச முடிந்த ஒரு நபராக சல்மான் கான் நிச்சயம் இருப்பார் "என்ற அறிமுக உரையுடன் கூகிள் நிறுவனத்தின் தலைவர் eric  schimdt சல்மான் கானுடன்  உரையாடும் காணொளி


6. The One World Schoolhouse: Education Reimagined என்ற தலைப்பில் இவரது புத்தகம் சென்ற மாதம் வெளியானது. அதிலிருந்து கொஞ்சம் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போதே நான் ஆர்வமாக தேடியது ஒன்றைத்தான். அது இவர் முதலில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த cousin நாதியா இப்போது என்ன செய்கிறார் என்று. அம்மிணி பெரிய ஆள் ஆகி டாக்டருக்கு படிக்கிராகளாம் :)

பார்த்ததும் படித்ததும் கேட்டதும் - 2




தமிழ் பகுதி:

1 . அட்டைப்படத்தில் சோகமான செய்திகளைப் போட்டாலும் நடுப் பக்கத்தில் போர்னோ படங்களைப் போட்டு பெண் உடலை வணிகப் பொருளாக்கும் சந்தைக் கலாச்சாரத்துக்கு பிரபல வார இதழ்கள் துணை போவதை எப்போதுமே நாம் எதிர்ப்போம். அபூர்வமாக மார்க்சிய சிந்தனை உடைய சகோதரி நிர்மலா கொற்றவை  தெளிவாக தனது கட்டுரையில் இந்தக் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். "மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே" என்று ஆரம்பிக்கும் இவரது கட்டுரை சரியான சாட்டையடி.

http://saavinudhadugal.blogspot.in/2012/10/blog-post_17.html

 2 பெரியவர் ராமதுரை எழுதும் அறிவியல் பதிவுகள் காத்திரமானவை. நல்ல தகவல்களை உள்ளடக்குபவை. எல்லாவற்றிக்கும் மேலாய் சுவாரசியமானவை.
"இரவு வானின் நிறம் என்ன? . " என்ற கேள்விக்கான அவரது பதில் இங்கே


http://www.ariviyal.in/2012/10/blog-post_14.html


3 .பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் இருப்பதால் வருடத்துக்கு 300 நாட்களுக்கும் மேல் பளிச்சென்று சூரிய வெளிச்சம் கிடைக்கும்   நமது நாட்டில் சில மாநிலங்களில் பவர் தட்டுப்பாடு வருவது நாம் எவ்வளவு சூரிய சக்தியை வீணடிக்கிறோம் என்பதற்கான சான்று. வளர்ந்த நாடுகளே இன்று மிகக் கடுமையாக சூரிய சக்தியை அறுவடை செய்து மின் ஆற்றலில் பெரும் புரட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. நாமும் என்னென்ன செய்யலாம் என்று சொல்லித்தரும் பூவுலகின் நண்பர்கள்.

http://www.poovulagu.net/2012/10/blog-post_17.html

 
ஆங்கிலம:

1 சூப்பர் ஸ்டார்கள் வரிசையில், உலகின் மாபெரும் நிலப்பரப்பை கைவசப்படுத்திய, நீதி நேர்மையின் சிகரமாய்த் திகழ்ந்த , ஒரு பேரரசின் ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்று பின்னால் வந்தவர்களுக்கு பாடம் நடத்திய இரண்டாம் கலீபா உமர் ரலி அவர்களின் வாழ்க்கையின் சிறு பகுதியை பற்றி பேசுகிறார் ஷேய்க் ஓமர் சுலைமான்,


http://www.youtube.com/watch?v=iUsKxPnjYPk

 
2 .சிறந்த புத்தக ஆசிரியர்களை  Google நிறுவனத்தில்   நடக்கும் Authors @Google என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள Google நிறுவனம் அழைக்கும். இந்த முறை அமெரிக்க இளம் முஸ்லிம்களில் பிரபலமான நாடக ஆசிரியர் வஜாஹத் அலி கலந்து கொண்டு தனது பயணத்தை நகைச்சுவை கலந்து விவரிக்கிறார் .

http://www.youtube.com/watch?v=GqpC3aP_6qg