சிகாடாவும் பகோடாவும் !!!


இரு வாரங்களுக்கு முன்னாள் ஒருநாள் அலுவலக நண்பர் மதிய இடைவேளை நேரத்தில் சொன்னார்.

" வெளில நெறைய சிகாடா வந்திருச்சி. பாத்தீங்களா? "

சுத்தமாக மறந்து போயிருந்தேன். சிகாடாக்கள் வரப்போகின்றன என்பது குறித்தான செய்திகளை படித்திருந்தேன். ஆனாலும் கவனிக்கவில்லை. நண்பர் சொன்னவுடன் தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து மரங்களைக் கவனித்தேன். எங்கு நோக்கினும் சிகாடாக்கள்.

என்ன இது பகோடா மாதிரி ஒரு சிகாடா ன்னு கேக்குறீங்களா? . இருங்க சொல்றேன்.




மேலே இருக்கிற படத்துல இருக்கிறது தான் சிகாடா. இதுல ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் variety இருக்கு. இதுல நான் சொல்ற சிகாடாவின் பெயர் மேஜிக் சிகாடா. பெயர் கூட எவ்வளவு பொருத்தம் என்று  பின்னர் புரிந்து கொள்வீர்கள்.

சிகாடாக்கள் வசந்த காலத்தின் முடிவில், கோடைக் கால துவக்கத்தில் மண்ணில் இருந்து வெளியே வரும். தரையெங்கும் நிறைய துளைகள் போட்டு அதில் இருந்து பல மில்லியன் பூச்சிகள் வெளியே வரும்.

ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் சேர்ந்து இனப் பெருக்கம் செய்து, ஒவ்வொரு பெண்ணும் ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டு மரத்தடியிலும் கிளைகளிலும்  வைக்கும்.

இந்த முட்டைகள் பொரித்து சிறிய குஞ்சாக மாறி பின்னர் மரத்தில் இருந்து விழுந்து விடும். கீழே விழுந்த இந்த சின்னஞ் சிறுசுகள் மண்ணுக்குள் மெதுவாகச் சென்று விடும். பின்னர் மண்ணுக்குள் தான் வாழ்க்கை. தாவரங்களின் வேரில் இருந்து ஜூஸ் குடிச்சு வாழும். ஒரு "குறிப்பிட்ட காலம்" முடிந்ததும் நான் கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல மண்ணில் துளை போட்டு வெளியே வரும்.

இதுல என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா?

இந்த மண்ணுக்குள் வாசம் செய்யும் நாட்கள் ஒவ்வொரு இன சிகாடாவுக்கும் வேறுபடும். சில பூச்சி இனங்கள் ஒரு வருடத்தில் வெளிவரும். சில இரண்டு மூன்று என்று வேறுபடும்.

வட அமெரிக்கப் பகுதிகளில் வெளிவரும் நான் பார்த்த இந்த சிகாடாக்கள் 17 வருடத்துக்கு ஒருமுறை தான் வெளியே வரும். சில இனங்கள் 13 வருடத்துக்கு ஒரு முறை.

17 வருடங்கள் தாவரங்களின் வேரில் இருந்து உணவு உட்கொண்டு வெளியே என்ன நடக்கிறது தெரியாமலே பூமிக்குள் உறைவிடம் கொண்டு ,  அதன் பருவம் வந்த உடன் மிகச் சரியாக வெளியே வருகிறது என்பது தான் இதில் வியக்கத்தக்க விஷயம். எப்படி இந்த சுழற்சி முறையை இந்தப் பூச்சிகள் இத்தனை வருடங்களுக்கு ஒருமுறை சரியாகச் செய்கின்றன  என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.





அலுவலகத்துக்கு வெளியே மரத்தில் இருந்த சிகாடாக்கள்
அதீத நகரமயமாக்கலின் விளைவால் 17 வருடங்களுக்கு முன் ஒரு காட்டுக்குள் விழுந்து மண்ணுக்குள் போன ஒரு சிகாடா குஞ்சொன்று இன்று மண்ணிலிருந்து வெளிவருவது ஒரு நகர்ப்புற வீட்டின் முன்பாக இருக்கலாம்.

ஆண் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்காக பெண் பூச்சிகளை கவர ஒரு வித்தியாசமான ஓசை ஒன்றை வெளிப்படுத்துகிறது. இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கான பூச்சிகள் அதிக அளவு டெசிபலில் கத்துவதால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாலே காது அடைக்கிறது. இதனை சிகாடா பாட்டு (cicada  song ) என்று கூறுகிறார்கள்.


நியூ ஜெர்சியில் பூச்சிகளின் வருகை குறித்த செய்தித் துணுக்கு


பூச்சிகளை உண்ணும் பறவைகளுக்கும் மற்ற ஊர்வனவைக்கும் இது விருந்து காலம். முட்டை போட்டு அடுத்த தலைமுறைக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தவுடன் சிகாடாக்கள் நிம்மதியாக கண்மூடிவிடும். பறவைகளும் மற்ற பூச்சிகளை உண்ணும் ஊர்வன போன்றவை இந்தப் பூச்சிகளை தின்று தீர்க்கும்.

சரி தலைப்புக்கு வருவோம். விஷயம் என்னன்னா Cicadas are  Edible :)

அதனால் இந்தப் பகுதிகளில் சிலர் அதனைச் சாப்பிடுகிறார்கள். கீழே இருக்கிற படத்துல இருக்கற மாதிரி நல்ல மொறு மொறுன்னு பக்கோடா மாதிரி எங்கயாவது சிகாடா கெடைக்குமான்னு பாக்குறேன். விசாரிச்ச வரையில் எந்த ஹோட்டலிலும் இல்லை. 17 வருடங்கள் தாண்டி இனியொருமுறை சிகாடாவை நான் பார்ப்பேனா என்று தெரியாது. அதற்குமுன் எப்படியாவது சிகாடா  பக்கோடா சாப்பிடவேண்டும் :)



Deep  Fried Cicada :)
 

மேலதிக தகவல்கள்:

1. சிகாடாக்கள் குறித்த விக்கி பக்கத்துக்கு இங்கே சுட்டவும்.

2. மேஜிக் சிகாடாக்கள் குறித்த விக்கி பக்கத்துக்கு இங்கே சுட்டவும்.

3. எங்கெல்லாம் சிகாடக்கள் பார்க்கலாம் போன்ற லோக்கல் தகவல்களுக்கு இங்கே செல்லவும்.