மேலே நீங்கள் பார்க்கும் அழகுப் பூச்சி நான் தான் . கருப்பும் மெல்லிய ஆரஞ்சு நிறமும் கலந்து வெள்ளைப் புள்ளிகளும் கொண்ட எனது இறக்கைகள் அழகோ அழகு.ஆபத்து இல்லாத அழகா? ஆபத்து இருக்கிறது...பின்னர் சொல்கிறேன். !!!
ஆங்கிலத்தில் எனது பெயர்
monarch butterfly . தேமதுரத் தமிழில் எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள். அரசன் வண்ணத்துப்பூச்சி அல்லது
அரசி வண்ணத்துப்பூச்சி அல்லது ராஜ வண்ணத்துப்பூச்சி என எப்படி வேண்டுமானாலும் !!!
செப்டம்பர் மாதம்...கனடா நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் ஈரி ஏரியின் (
Lake Erie )
கரையில் ஒரு மரத்தில் நெக்டார்(Nectar) உண்டு
கொண்டிருக்கிறேன். கோடைக்காலம் முடிந்து
கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இலையுதிர் காலம் ஆரம்பிக்கும்.
சில்லென்று அடிக்கும் காற்றில் இருக்கும் குளிர் தன்மைகளை வைத்து இதை கணிக்கும்
திறன் எனக்கு இருக்கிறது...ஐயோ !!! குளிர் என்னால் தாங்க முடியாது.. இலையுதிர்
காலம் முடிந்து குளிர் காலம் வரும்..கனடா மற்றும் அமெரிக்காவில் குளிர்
காலம் ஒரு கொடுமை. என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. நான் வேறு எங்காவது
செல்ல வேண்டும் இந்தக் குளிரில் இருந்து தப்பிக்க ..
நிறைய
பூக்களிலிருந்து நெக்டார் குடித்து என்னை தயார் செய்து இதோ பறக்கத் தொடங்குகிறேன். ஏரியின் மறுபக்கம்
அமெரிக்க நாடு...அங்கு
செல்லவேண்டுமெனில் இந்த ஏரியை கடந்தாக வேண்டும் ..கனடா நாட்டுக்கு மேலே
செல்லச் செல்ல இன்னும் குளிரும்...இன்னும் மேலே போனால் ஆர்டிக் பகுதிகள்..அவ்வளவு
தான் !! நான் செத்து விடுவேன்... இன்னாலில்லாஹ் !!
ஒரே வழி இந்தப் பக்கம்
அமெரிக்கா செல்வது தான்... சுமார் 100 கிலோமீட்டரை
விட அதிகமான நீளம் கொண்ட இந்த ஏரியை கடப்பது தான் எனது முதல் வேலை. என்
வாழ்நாளில் நான் சில மீட்டர்களுக்கு மேல் பறந்ததில்லை..நீங்கள்
உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் என் சின்ன கால்களுக்கும் உங்கள்
உள்ளங்கைகளில் அடங்கி விடும் என் சின்ன இறகுகளுக்கும் இது ஒரு இமாலயப்
பயணம். உயிர் பிழைக்க இது மட்டுமே வழி என்பதால் நிறைய தேனுண்டு என்னை தயார் செய்து
கிளம்புகிறேன்..
பறந்து இந்த மாபெரும் ஈரி ஏரியை (
Lake Erie )
கடந்து அமெரிக்காவில் நுழைகிறேன்..எனது பயணம் இங்கே
முடியாது..குளிர்காலத்தில் இதுவும் என் மெல்லிய உடலுக்கு
ஏற்றதல்ல...இன்னும் தூரம் செல்ல வேண்டும் ..பறக்கிறேன்..பறக்கிறேன்..பறந்து பறந்து 200 கிலோமீட்டர்
....இல்லை முன்னூறு , அடுத்து நானூறு ,ஐநூறு ,அறுநூறு, ஆயிரம் ..ஆயிரத்து ஐநூறு.....
மயக்கம் போட்டு
விழுந்து விடாதீர்கள் 3000 கிலோமீட்டர்கள் பறந்து மெக்ஸிகோ நாட்டின் ஒரு
சின்ன காட்டில் வந்து சேர்ந்துவிட்டேன்...நான் மட்டுமல்ல என்னைப் போல
லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மற்ற
monarch வண்ணத்துப்பூச்சிகளும் தான்..
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் !!
1.
முதலில் உங்களிடம் சொன்னது போல வாழ்நாளில் சில நூறு மீட்டர்களுக்கு மேல்
பறந்திராத நான் எப்படி 3000 கிலோமீட்டர்கள் பறந்து வந்தேன்?
2. அது
கூடப் போகட்டும். கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாண்டி
மெக்ஸிகோ நாட்டுக்கு அதுவும் இந்த சின்னக் காட்டுக்கு நான் எப்படி வந்தேன்?
3.
என்னை விட்டுவிடுங்கள்...வட அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து என்னைப்போல கோடிக்கணக்கான பூச்சிகள் எப்படி சொல்லி வைத்தது மாதிரி சரியான நேரத்தில் இங்கு வந்து சேர்ந்தன?
4. பக்கத்து ஊருக்குப்
போவதற்கே பல்வேறு போர்டுகளைப் பார்த்துப் போகும் நீங்கள், என்னால் வழி
தவறாமல் 2000 மைல்கள் பறக்க முடிந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
இதெல்லாம் உங்களுக்கு புரியாது...ஏன் ?எனக்கே தெரியாது :)
..படைத்தவனுக்கே வெளிச்சம் :)
இங்கே மெக்ஸிகோவிலும் குளிர் காலம் தான் ...ஆனால் கனடா மற்றும் அமெரிக்கா போன்ற
கடுங்குளிர் இல்லை...சமாளிக்கலாம்.. கூட்டம் கூட்டமாக ஒன்றோடொன்று உடம்பை
ஓட்ட வைத்துக் கொண்டு இதோ இந்த சின்ன காட்டின் மரங்களில் தொங்கிக்கொண்டே
ஒரு சிறு தூக்கம் (Hibernation) போடவிருக்கிறோம் ஜமாத்தாக...ரொம்ப எல்லாம் இல்லை..
ஜஸ்ட்
நாலு மாதம் மட்டுமே...கொர்ர்ர்ரர்ர்ர்ரர் !!!!!!
கொத்துக் கொத்தாய் monarch வண்ணத்துப்பூச்சிகள் தூங்கும் காட்சி
தூக்கத்தில் சில தகவல் சொல்றேன் கேட்டுக்கோங்க !!
கூட்டம்
கூட்டமாக நாங்கள் அசந்து மாதக்கணக்கில் தூங்குவதை வாய்ப்பாக பயன்படுத்தி
எங்களை துவம்சம் செய்ய வரும் எதிரிகள் பலர் உண்டு...அதிலும் இந்த பல்லிகள்
இருக்கே ரொம்ப மோசம்..கடிச்சு சாப்பிடும் எங்கள...இங்க தான் ஒரு
ட்விஸ்ட்...அழகு கொஞ்சும் இந்த உடல் முழுவதும் விஷம் :)
..அதனால் பல்லி தவளை போன்றவை எங்களை சாப்பிட முடியாது :)
..ஆனாலும் நீளமான அலகு வைத்திருக்கும் சில பறவைகள் சர்வ சாதரணமாக எங்கள்
இறகுகளை பிய்த்துப் போட்டுவிட்டு விஷம் அதிகமான பகுதிகளையும் பிய்த்து விட்டு சாப்பிடும் :(
ஆஹா !! கொஞ்சம்
விழிப்பு வருகிறது..குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தின் இளஞ்சூடு எங்கள்
தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கிறது. மரத்தில் ஒட்டியிருந்த மாபெரும் கூட்டம்
சிதறுகிறது..நான்கு மாதங்கள் கழித்து முதல் முறையாக பக்கத்தில் இருக்கும்
சிற்றோடையில் நீர் பருகுகிறேன். ஆஹா என்ன சுவை !!!
குளிரில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட நீநீநீநீநீநீநீநீநீண்ட பயணம் மற்றும் தூக்கம் எல்லாம்
வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டுவிட்டது...ஒரு நாள் என்னால் 80 மைல்கள் மட்டுமே அதிகபட்சம் பறக்க முடியும்..அதற்குள்
தேன் கிடைக்கும் ஒரு இடத்தை அடைந்துவிடுவோம்..சாப்பிட்டு மீண்டும்
பயணம்..இப்படி கனாடவில் இருந்து மெக்ஸிகோ வர மட்டுமே ஒரு மாத காலம்
போய்விட்டது. ஆமாம் எங்கள் ஒட்டு மொத்த
வாழ்நாளே ஒரு வருடம் கூட தேறாது...மாதங்களைத் தொலைத்து விட்டோம்...நீருண்ட
பின்னர் முக்கிய விஷயம் இருக்கிறது..வேறென்ன இனப்பெருக்கம் தான்...நீருண்ட
ஆண் பூச்சிகள் மரத்தில் இன்னும் தூங்கும் பெண் பூச்சிகளை பிய்த்து
எழுப்புகிறது...குறை சொல்ல ஒன்றுமில்லை...நேரம் இல்லை எங்களுக்கு
அதனால்தான் இந்த முயற்சி...
அடுத்து என்ன !! இனப்பெருக்கம் முடிந்தால் மகப்பேறு
தான்..miscarriage ,abortion ,கருக்கலைப்பு, cord around neck, Fallopian
tube pregnancy எல்லாம் உங்களுக்குத் தான்..எங்களுக்கு இல்லை ...எங்களுக்கு எப்போதுமே சுகப் பிரசவம் :)
கண்மூடுகிறேன் தோழர்களே...அவ்வளவு தான் என் வாழ்க்கை...நீங்கள் மட்டும் என்னவாம்? என்னைவிட சில வருடங்கள் அதிகம்..தட்ஸ் ஆல்..
நிறைவாக
வாழ்ந்து என் சந்ததியை உங்கள் பார்வையில் விட்டுப் போகிறேன்..என் கதை
உணர்ச்சி மிக்கதாய் இருந்தது என்று நீங்கள் சொல்வது காதில் சன்னமாய்
கேட்கிறது..இல்லை தோழர்களே..எனது மகனின்/மகளின் கதையை கேளுங்கள் அதைவிட
எனது அழகுப் பேத்தி/பேரனின் கதையை கண்டிப்பாகக் கேளுங்கள்...உணர்ச்சி மிக்க
மற்றொரு அத்தியாயம் அது..கடைசியில் எனது கொள்ளுப்பேரன் சில கேள்விகளுடன்
உங்கள் முன் வருவான்...கண்டிப்பாக உங்களால் விடை சொல்ல முடியாத
கேள்விகள்....Don't மிஸ் இட் !!!
முதல் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள்
என்
தாயின் கடைசிக் காலத்தில் சில தகவல்களை உங்களுக்குச்
சொல்லமுடியவில்லை...வசந்த காலத்தின் தொடக்கத்தில் இனப்பெருக்கம் முடிந்து
முட்டைகளை அவள் இட்டு வைத்தது எருக்கஞ்செடியில் (Milkweeds ). அதில்
முட்டை பொரித்து வெளிவரும் நாங்கள் அந்த நச்சுப்பால் நிறைந்த
எருக்கஞ்செடியின் இலைகளை கபளீகரம் செய்வதால் தான் எங்கள் உடலுக்கும் வந்தது
அந்த நச்சுத் தன்மை. எதிரிகளிடமிருந்து எங்களைப் பாதுகாக்கும் இந்த
விஷயம் இங்கே எங்கள் பிறப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது.
முட்டையிலிருந்து வெளிவந்து புழுவாகி பின்னர் பூச்சியாகி நாங்கள் முழு
வண்ணத்துப்பூச்சியாவோம். மெக்ஸிகோ எங்கள் வீடல்ல வெறும் விடுதி மட்டுமே.
என் தாய் தேசத்துக்கு நான் திரும்ப வேண்டும். நான் கனவில் கூட பார்த்திராத
3000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கனடா நோக்கிய எனது பயணம் ஆரம்பம். வழியே
தெரியாத, கேள்விப்பட்டிராத ஒரு தேசத்துக்கு இவ்வளவு தொலைவு தாண்டி
எப்படிப் போவேன் என்கிறீர்களா? எனக்கும் தெரியவில்லை...எல்லாம் படைத்தவன்
தந்த இயற்கை உள்ளுணர்வு தான் (Natural Instinct ).
என் தாய் இந்தப்
பயணத்தை நிகழ்த்தியதும் அப்படித்தான். சூரியன் தான் எங்கள் திசைகாட்டி
(compass). பூமியின் காந்தப்புலத்தையும் சூரியனின் வெளிச்சத்தையும்
வைத்து நாங்கள் திசை அறிந்து பயணிப்பதாய் உங்கள் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..எங்களிடம் கேட்கவா செய்தார்கள் :) ?
சுமார்
1000 கிலோமீட்டர்கள் பறந்துவிட்டேன் தோழர்களே. உடல் இசைய மறுக்கிறது...என்
அம்மாவைப் போல் நான் அதீத பலசாலி அல்ல.சவலைப்பிள்ளை. நான் மட்டும் சவலையாக
இருந்தால் பரவா இல்லை..என் அம்மாவின் தலைமுறையில் இருந்து பிறந்து வந்த
லட்சக்கணக்கான என் தலைமுறை பூச்சிகள் அனைவருமே சவலைப்பிள்ளை தான். பயணம்
முடிவுக்கு வரும் இன்னும் சில நாட்களில்..என் வரலாறு இத்தோடு முடிந்து
விடுமா? இல்லை கூடாது...தன்னந்தனியே கனடா டு மெக்ஸிகோ போன பரம்பரையின்
மானம் என்ன ஆவது?
பேசி புண்ணியமில்லை...நாங்கள் கூட்டம் கூட்டமாய் தரை
இறங்குகிறோம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே
எருக்கங்காட்டுக்குள்...இனப்பெருக்கம் செய்து எருக்க
இலைகளில் முட்டையிட்டு இதோ கண்மூடுகிறேன்.. என் மகனிடம் நேரமிருந்தால்
பேசுங்கள்..
இரண்டாம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் :
முட்டை to புழு to
பூச்சி எல்லாம் முடிந்து நானும் பறக்கிறேன்.எங்கே ? என்று கேட்கிறீர்களா?
வேறெங்கே.என் தாய் தேசம் நோக்கித் தான். எப்படித்தெரியும் எனக்கு அது எங்கே
இருக்கிறது எவ்வளவு தூரம் பறப்பது என்றெல்லாம்? நீங்கள்
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் அதிசயங்களின் தொடர்ச்சி தான்
இது..எங்கு செல்ல வேண்டும் என்ற வரைபடம் (Map ) எனக்குள் இருப்பதாய்
விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
நானும் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள்
பயணித்து விட்டேன்...முந்தய தலைமுறை போல் என்னாலும் இலக்கை எட்ட
முடியவில்லை...தரை இறங்கி எருக்கன்காட்டுக்குள் முட்டையிட்டு சந்ததியை
உறுதிசெய்து மாண்டு போகிறேன்..அடுத்த தலைமுறை உங்களிடம் வரும்..பரிவாய்ப்
பேசுங்கள் அவர்களிடம்.
மூன்றாம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் :
தொடர்
ஓட்டப் பந்தயத்தில் ஒரு வீரனிடம் இருந்து மற்ற வீரனுக்கு கடத்தப்படும்
குறுந்தடி (Baton ) போல பொறுப்பு இப்போது எங்களிடம்...பரம்பரை பரம்பரையாக
எங்கள் தாய் தேசத்தின் வரைபடமும் அங்கு செல்வதற்கான வழியும் எங்கள் மூளையில் பதிந்திருப்பதாய் (Imprint ) சொல்கிறீர்கள். என்னமோ ஒன்று..ஆனால்
நாங்களும் பறக்கிறோம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள்.
வெற்றி!!! வெற்றி !!! வந்துவிட்டோம் எங்கள் முன்னோர்களின் தேசத்தில்.
வசந்த காலத்தில் மெக்ஸிகோவில் எங்கள் முன்னோர்களால் தொடங்கப்பட்ட பயணம் கோடைக்காலத்தில் முடிவுக்கு வருகிறது.
இன்னும்
சில மாதங்களில் கோடைக்காலம் முடிந்து விடும்..நாங்களும் பலசாலி தலைமுறை
அல்லர். சந்ததியை உருவாக்கி கண்மூடுகிறோம்..அடுத்த தலைமுறை கண்டிப்பாக
உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
நான்காம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் அல்லது சூப்பர் தலைமுறை (Super Generation ) :
செப்டம்பர் மாதம்..கனடாவில் ஒரு ஏரிக்கரையில் நெக்டார் உண்டு
அமர்ந்திருக்கிறேன்..
எங்கோ
கேட்ட குரலாகத் தெரிகிறதா? ஆமாம் என் கொள்ளுப்பாட்டி உங்களிடம்
சொல்லிச்சென்ற கொள்ளுப் பேரன் நான்தான்...என் அம்மா மற்றும் பாட்டி போல
சவலைப் பிள்ளை இல்லை நான்..என் பெயர் பார்த்தே யூகித்திருப்பீர்கள் ..
சூப்பர் தலைமுறை. Super Generation !!
இதோ வந்து விட்டது இலையுதிர்
காலம். கொள்ளுப் பாட்டியைப் போல் நானும் பறப்பேன் மெக்ஸிகோவுக்கு. எனக்கு
முந்திய தலைமுறை போல் வழியில் செத்துப் போக மாட்டேன்.. கனடா to மெக்ஸிகோ
நேரடிப் பயணம் ..3000 கிலோமீட்டர்கள்..
அதெப்படி உனக்கு மட்டும் மெக்ஸிகோ வரை செல்லும் பலம்
கிடைத்தது என்று கேட்கிறீர்களா? தொடரும் ஆச்சர்யங்களில் அதுவும் ஒன்று
தான். இனி கொள்ளுப் பாட்டி உங்களிடம் கேட்கச் சொன்ன கேள்விகளைக்
கேட்கிறேன்..உங்களுக்கு பதில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பரிணாமம் பற்றிப் பேசும்
உங்கள் தோழர்களிடம் மறக்காமல் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்..
1. முன்பு பார்த்திராத ஒரு தேசத்துக்கு எப்படி நாங்கள் செல்கிறோம்? ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எப்படி இந்த தகவல்களை பரிமாறியது?
2.
மெக்ஸிகோவில் இருந்து கனடா வந்து சேர மூன்று தலைமுறை பிடித்தது..ஆனால்
கனாடவில் இருந்து மெக்ஸிகோவுக்கு எப்படி ஒரே தலைமுறையைச் சார்ந்த நான்
(Super Generation) பயணிக்கிறேன் ?
3. இயற்கைத் தேர்வு (Natural
Selection ) என்னும் பரிணாம விதிப்படி அடுத்தடுத்த தலைமுறை தங்களை
தகவமைத்துக் கொள்ள வேண்டுமே. ஆனால் சூப்பர் தலைமுறைக்கு பின்னர் வந்த
மூன்று தலைமுறையும் ஏன் சவலைப் பிள்ளையாய் போனது?
4. ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் இந்த நிகழ்வில் ஏன் இப்படி மூன்று தலைமுறைகளுக்கு அடுத்து வரும் ஒரு தலைமுறை சர்வ பலசாலியாய் இருக்கிறது?
5.
மெக்ஸிகோ நான் வாழத் தகுதியான இடமெனினும் என் தலைமுறைகள் ஏன் கனடா நோக்கி
வருகிறது? இயற்கைத் தேர்வு (Natural Selection ) என்னும் பரிணாம விதிப்படி
எனக்கு உகந்த பகுதியாக மெக்ஸிகோ இருக்கும்போது நான் ஏன் கஷ்டத்தை விலை
கொடுத்து வாங்குகிறேன்?
6. மில்லியன் கணக்கான ஆண்டுகள் எங்கள் மூதாதையர்
இப்படி பறந்து கொண்டிருந்தாலும் எங்கள் இறக்கைகள் இன்னும் ஏன் சிறியதாகவே
இருக்கிறது?
7. பரிணாம விதிப்படி நான் ஏன் குளிர் காலத்திலும் வாழுமாறு
என்னை தகவமைத்துக் கொள்ளவில்லை? காலம் காலமாக நான் ஏன் இவ்வளவு தூரம்
பயணித்து குளிரில் இருந்து தப்ப நினைக்கிறேன்?
8. கனடா அமெரிக்கா
மெக்ஸிகோ என்று மட்டுமே நான் ஏன் சுற்றுகிறேன்? வருடம் முழுவதும் எனக்கேற்ற
காலநிலை உள்ள ஒரு இடத்துக்கு செல்ல நான் ஏன் இன்னும் முயலவில்லை?
மேலதிக தகவல்கள்:
1.BBC தொலைக்காட்சியின் புகழ்பெற்ற LIFE தொடரில் இருந்து இந்த monarch வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்தல் பற்றிய அழகிய காணொளி பார்க்க
2. இந்த வண்ணத்துப் பூச்சிகள் குறித்து ஸ்மித்சோனியன் institute பக்கத்தில் சில தகவல்கள் பார்க்க
3. இவை குறித்த விக்கி பக்கம் பார்க்க
நன்றிகள் :
பரிணாமம் குறித்தான எனது சந்தேகங்களுக்குப் பதிலளித்த நண்பர் ஆஷிக் க்கு நன்றிகள் பல.